சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், சேலத்தில் தொடரும் சாரல் மழை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.

. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கடந்த 10 நாட்களாக மழை வாய்ப்பு குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட க தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று காலையில் மழை தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்து வருவதால் , தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும், மருத்துவமனைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 2-ம் நாளாக இன்று மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கொட்டு மழையும் பொருட்படுத்தாமல் பள்ளி குழந்தைகள் கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரக் காலமாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம். ஆனால் ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்காட்டில் உள்ள மலைக் கிராமங்களிலிருந்து வரும் மாணவ மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் குடைபிடித்துச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணத்தால் ஏற்காட்டில் கடும் குளிர் அதிகரித்துள்ள நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் ரெயின் கோட் மற்றும் ஜெர்கின் அணிந்தே செல்கின்றனர். தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் கடுங்குளிர் நிலவி வருவதால் குறைந்த அளவிலேயே பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.