மிசோரம்:
மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
மிசோரம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஐசால் மாவட்டம் டிலங்வெல் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தபோது நிலச்சரிவுடன் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் கணவன் மனைவி மற்றும் அவர்களின் 4 வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர். 11 வயது மகன் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டான். மற்றொரு வீட்டில் வசித்த வயது முதிர்ந்த பெண், அவரது 25 வயது மகன் ஆகியோர் பலியாகினர்.
இரவு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. சில பகுதிகளில் தொலைத்தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்லா பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டமும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 19 கல்லறைகளில் உள்ள எலும்புகள் வெளியில் தெரிந்தன.
அவற்றை உள்ளூர் தன்னார்வலர்கள் சேகரித்து மீண்டும் அடக்கம் செய்தனர்.
இந்த கல்லறை தோட்டம் 1997-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவின்போதும் கடுமையாக பாதிக்கப்பட்டு, 68 கல்லறைகள் முற்றிலும் அழிந்தது குறிப்பிடத்தக்கது.