சென்னை: டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும், கன்னியா குமரி, திருநெல்வேலி தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
01.10.2021: தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
02.10.2021 , 03.10.2021 : தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
03.10.2021: புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
04.10.2021 : தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்
05.10.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
காற்று அதிகம் வீசும் கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.