தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. சென்னைக்கும், ஆந்திராவுக்கும் இடையே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தற்போது மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று வலுப்பெற்று, தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதன் பின் புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றாலும், மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மிதமான அளவு மழை பெய்தது. கன்னியாகுமரியில் தொடர்ந்து கடல் சீற்றத்துடனேயே மழை பெய்து வருகிறது.
வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, சென்னையில் இன்று மாலை முதல் மழை தீவிரமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.