நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சைலன்டு வேலி உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது.

ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் ஜூலை மாதம் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி இரண்டு வாரங்கள் ஆன பின்னும் பருவமழை பெய்யாததால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் 110 அடி  கொள்ளவை கொண்ட பில்லூர் அணை முழு கொள்ளவை எட்டாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதியில் பெய்த கனமழை காரணமாக அத்திக்கடவு பவானி ஆற்றில் தற்போது நீர் ஓடத்துவங்கியுள்ளது. வரும் நாட்களில் மழை அதிகரித்து தண்ணீர் வந்தால் மட்டுமே பில்லுார் அணை நிரம்ப வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் பவானி ஆற்றில் 30 கனஅடி முதல் 40 கனஅடி வரை தண்ணீர் வரத்து இருக்கும், ஆனால் தற்போது 10 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருவது குறிப்பிடதக்கது. மேலும், பில்லூர் அணை நிரம்பினால் திறந்து விடப்படும் நீர் பவானிசாகர் அணையில் தேக்கிவைக்கப்படும். இந்த நீர் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பயன்படும். தற்போது பில்லுார் அணைக்கே குறைந்தளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பவானி சாகர் அணைக்கு உபரி நீரை திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.