சென்னை,
போலீசார் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து தலைமை செயலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் போலீசாரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானதால் தலைமைச்செயலகம், மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துபவர்கள் தலைமை செயலகம் மற்றும் சட்டசபையை முற்றுகையிட திட்ட மிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தலைமை செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னம் போன்ற பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. அப்போது, போலீசாரின் கோரிக்கைக்கு முதல்வர் பதில் அளிப்பார் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே காவல்துறையின் ஒரு பிரிவினர் இதுகுறித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
அதில்,
•காவலர்களுக்கு பணியில் ஏற்படும் அழுத்தங்களைத் தவிர்க்க, மன நலம் சார்ந்த பயிற்சி வகுப்புகளை ஊக்குவித்தல், காவலர் நலச்சங்கம் அமைக்க அனுமதி தருதல்
• உயர் காவல் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, மற்ற காவலர்களைப் பயன்படுத்தும்’ஆர்டர்லி’ முறையை ஒழித்தல்.
• காவலர் சங்கம் அமைக்க அனுமதி அளித்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காவல்துறை அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.