சென்னை:  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு,  சென்னை பார்த்தசாரதி கோயிலில்  வரும் 10ந்தேதி சொர்க்கவாசல்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல்  திறக்கப்பட உள்ளது.

சொர்க்கவாசல் திறப்பு தரிசன கட்டணச் சீட்டு நபர் ஒருவருக்கு தலா ரூ.500ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி காலை 11 மணிக்கு கட்டணச் சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வரும் 500 பேர் முன்னுரிமை அடிப்படையில் கட்டணமின்றி அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டது.

108 வைணவ திவ்ய தேசங்களில், சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது தனிச்சிறப்பு. கருவறையில் மூலவர் வேங்கடகிருஷ்ணர் அருகே ருக்மிணி தாயார், மார்பில் மகாலட்சுமி, அவரது வலதுபுறத்தில் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் உள்ளனர். ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.

வழக்கமாக மீசையுடன் தோன்றும் மூலவர், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில்லாமல் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது, உற்சவர் மீசையுடன் அருள்பாலிக்கிறார். பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இந்த கோவிலில்  வைகுண்ட ஏகாதசி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு, பிப்ரவரி மாத லட்சார்ச்சனை, ஏப்ரல் மாத பிரம்மோற்சவம், நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம், கோகுலாஷ்டமி உற்சவ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம்.

இங்குள்ள பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து பெருமாளின் அருளை பெற்றுச்  செல்கின்றனர்.

இந்த கோவிலில்,  இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து  விழா 2024ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அன்று  தொடங்கியது. 10 நாள் நடைபெறும் பகல்பத்து பத்தாம் திருநாள் ஜனவரி 9-ம் தேதியுடன்  நிறைவடைகிறது. பகல்பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தவகையில், பகல்பத்து 2-ம் திருநாளான நேற்று வேணுகோபாலன் திருக்கோலத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல் பத்து முடிந்து இராப்பத்து தொடங்கும் ஏகாதசி நாளான ஜன வரி 10-ம் தேதி பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார வழிபாடு நடக்கிறது. காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது.  அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரிய வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது.
ஜன.20-ம் தேதி வரை நடக்கும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் பார்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஜன.11-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 2 நாட்கள் காலையும், 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 7 நாட்கள் மாலை 4.15 மணிக்கும் பரமபத வாசல் சேவை நடைபெறுகிறது. மேலும், ஜன.5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறுகிறது.