மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம் 26 மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.  விசாரணையின்போது,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்?  மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியதுடன்,  மலை உச்சிமீது உள்ள கல், தீபத்தூணா, அளவை கல்லா என்பது குறித்தும், அதுதொடர்பான விளங்கங்களையும் பெற்றது.

மேலும்,  தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அதே போல, கடந்த 9ம் தேதி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தலைமைச் செயலாளர் மற்றும் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோரை அவமதிப்பு வழக்கில் காணொளியில் ஆஜராக பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அத்துடன், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் இடையீட்டு மனுக்கள் என மொத்தமாக தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து 26 மேல்முறையீட்டு மனுக்கள்  விசாரணைக்கு வந்தன.

இந்த மனுக்கள்மீத நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது, அப்போது அரசு தரப்பில், ” திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பழமையானது. அங்கு கார்த்திகையன்று பாரம்பரிய இடத்தில் தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி தனி நீதிபதி முன்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. அந்த மலையில் தர்ஹாவும் உள்ளது. இந்த மனு பொதுநல மனு போல் தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், மனுதாரர் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி இருந்தார்.

இதன் அடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட இயலாது. கடந்த 25.08.1923ஆம் ஆண்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீபமேற்றுவது தொடர்பாக ஏதும் கோரப்படவில்லை. கடந்த 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.‌ வழக்கமாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபமேற்றப்படும். இந்த ஆண்டும் அதுவே பின்பற்றப்பட்டது.

ராம ரவிக்குமார் எனும் மனுதாரர், தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.‌ இது தனிநபரின் கோரிக்கை. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல.‌ திருப்பரங்குன்றம் மலை தொடர்பான முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 1923 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவதால் எந்த பிரச்சனையும் இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் ஒரு இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.” என அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

நீதிபதிகள் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா? என்று உறுதி செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் கூறிய அரசு வழக்கறிஞர்,  திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ளது சர்வே கல் தான். பல்வேறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நடைமுறையே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது.

மேலும் இந்த விஷயத்தில்,  மனுதாரர் மனுவை உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணியின் கருத்தையே மனுதாரர் வலியுறுத்தி உள்ளார். மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் தான் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

மனுதாரரின் தனிப்பட்ட கோரிக்கை பொது நல வழக்கு போல விசாரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை வரலாற்றுடன் தொடர்பு உள்ளது. கோயில் நிர்வாகம் தீபத் தூணில் தீபம் ஏற்ற மறுத்ததால், மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளேன் என தனி நீதிபதி கூறுவது ஏற்புடையதல்ல.

இந்த பதட்டமான சூழ்நிலையில் தான் முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மூன்று நாட்களில் தீபம் ஏற்றுவது குறித்து எவ்வாறு நாம் முடிவு எடுக்க முடியும்? திருப்பரங்குன்றம் மலையை சுற்றி தீபம் ஏற்ற வேண்டும் என்றால் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்து சமய விதிகளுக்கு உட்பட்டு, முறையாக அனுமதி பெற்று தேவஸ்தானமே இடத்தை மாற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  அந்த இடம் தர்ஹா, நெல்லித்தோப்பு பகுதியிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டுமென முந்தைய உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பிக்க இயலாது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஆகம விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆகம விதிகளை மீறி தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட முடியாது. தர்கா அருகே தீபம் ஏற்றினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் தான் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.‌ இந்த மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.‌ இரு தரப்பினரும் அமைதியாக வாழக் கூடிய நிலையில் மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது.

தர்ஹா அருகே உள்ள தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எம்.எம். சுந்தரேஷ் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது, கோவில் நிர்வாகம் முடிவு செய்து கொள்ளட்டும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகளில், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. தேவையற்ற பிரச்சனை ஏற்படும் போது பொது அமைதியை காக்க வேண்டும், பொது அமைதி காப்பது தான் அரசியலில் தலையாய கடமை. தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு சரியான முடிவை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட சிந்தனைகள் இருக்கலாம், ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் இங்கு தீபம் ஏற்றியதுதான் சரி.

மனுதாரர் தற்போது தொடர்ந்த வழக்கிலும் தர்ஹா தரப்பு சேர்க்கப்படாததால், நீதிமன்றம் அவர்களை எதிர்மனுதாரராக சேர்த்தது. அது ஒரு கல் தூண், ஆனால் தீப தூண் தானா? இதற்கு என்ன ஆதாரத்தை மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்?. வழக்கமான முறையை மாற்றுவதற்கு ராம ரவிக்குமார் மனுவில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க இயலாது” என அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பு

இதற்கு மனுதாரர் தரப்பில், ”நெல்லித்தோப்பில் எல்லைப்படிகள் முடிகின்றன. மற்றொரு பகுதியில் தீபத்தூண் உள்ளது. புவியியல் ரீதியான அமைப்பையும் நாம் பார்க்க வேண்டும். சமூக அமைப்பையும் பார்க்க வேண்டும். நெல்லித்தோப்பில் ஒரு பகுதி பாதை தர்ஹாவிற்கும், மற்றொரு பாதை தீபத்தூணிற்கும் செல்கிறது என தனி நீதிபதி நேரில் ஆய்வு செய்து தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.

நெல்லித்தோப்பு என்பது யாரும் குடியிருக்கும் பகுதியா? இல்லை மலையின் ஒரு பகுதியா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கோயில் நிர்வாகம் தரப்பு

கோயில் தரப்பில், ”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமா? வேண்டாமா? என்பதை கோயில் நிர்வாகம் மட்டுமே முடிவெடுக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கூறியுள்ளார்.‌ மனுதாரர் ராம ரவிக்குமார் வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தால், அவர்கள் கோயில் இணை ஆணையரை அணுகி மனு அளிக்க வேண்டும். அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மனுதாரர் கோயில் அலுவலகத்தில் கொடுத்த கடிதத்தில், நீதிபதி கனகராஜ் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறி இருந்தார். கோயில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது என்று நாங்கள் மறுத்து விட்டோம். தீபம் ஏற்றுவதில் கோயில் நிர்வாகம் முடிவு தான் முக்கியமானது. இது குறித்து பல உத்தரவுகளில் உறுதியாகியுள்ளது.

கோவில் நிர்வாகம் தான் நேரடியாக நிர்வாகம் செய்கிறது, எனவே இந்த முடிவை எடுத்தோம். தனி நீதிபதி தனது உத்தரவில், ”உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த ஆண்டு முதல் மலை உச்சியில் மேலும் ஒரு தீபம் ஏற்றப்பட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஆனால், நீதிமன்றம் கோயிலில் புதிய பழக்க, வழக்கத்தை கடைப்பிடிக்க கோரி உத்தரவு பிறப்பிக்க இயலாது.” என கோயில் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன்,   மனுதாரர் ராம ரவிக்குமார் கொடுத்த மனுவை இணை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் ஏன் அனுப்பவில்லை? என்றும் வினவினர்.

அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, கிரானைட் கல் தான் என்றும் கோயில் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தொடர்ந்து நீதிபதிகள் மலை உச்சியில் உள்ள தூணை கட்டுமானம் செய்தது யார் என கேள்வி எழுப்பினர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்றும் கோயில் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாதென கூறி விசாரணை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வழக்கு ஒத்திவைப்பு

இதனை அடுத்து நீதிபதிகள், ”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்டுகிறது. அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்படும். தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, வழக்கு விசாரணைக்காகவே ஒத்திவைக்கப்படுகிறது” எனக் கூறினர்.

[youtube-feed feed=1]