சென்னை: ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 18வது மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார். தொடர்ந்து, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த பதவி ஏற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமித் ஷா மற்றும் அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். .
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக ஆந்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்துகள்
உங்கள் பதவிக்காலம் அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் நிரப்பப்படட்டும் என தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நான்காவது முறையாக ஆந்திர மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி ஆந்திரா மாநிலத்திற்கு வளர்ச்சி, வளத்தை கொண்டு வரட்டும். ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இருமாநில வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவும் எதிர்நோக்குகிறேன் என கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
tஅரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையிலான புதிய அரசு, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதோடு, அம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் அரசாக திகழ மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.