அமெரிக்க அதிபராய் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பின் அதிரடி ஆணையால், லிபியா, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இயலாது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஈராக், ஏமன், ஈரான் ஆகிய நான்கு நாடுகளிலிருந்து குடிமக்களுக்கு விசா கிடையாது என அறிவித்தார்.
மேலும், 120 நாட்களுக்கு அனைத்து அகதிகள் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். சிரிய அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரத் தடையையும் விதித்துள்ளார்.
டிரம்ப், அகதிகள் வருவதற்கு தடை விதித்துள்ள ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் மூன்று நாடுகள் ஆப்பிரிக்க யூனியனில் உறுப்பினராய் உள்ளன. இந்தத் தடைகுறித்து கருத்து தெரிவித்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் கோசசானா டிலாமினி ஜுமா, “சில முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு டொனால்டு டிரம்ப் விதித்துள்ள தடை ஆப்பிரிக்க கண்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும்” என்று குறைகூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றது முதலே மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றது.
ஆப்பிரிக்க யூனியனின் 53 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் உச்சி மாநாடு அடிஸ் அபாபாவில் நடைபெற்றது. இந்த ஆப்பிரிக்க யூனியன்,
அடிமை வர்த்தகம் நடைபெற்ற காலத்தில் எங்கள் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாக எம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது, அதே அமெரிக்கா எங்கள் நாடுகளிலிருந்து அகதிகள் நுழையத் தடை செய்ய முடிவெடுத்துள்ளது,” என்று கோசசானா டிலாமினி ஜுமா கூறினார்.
“இதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம்? அமெரிக்காவின் இந்த முடிவு, நமது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவால்களில் ஒன்றாகும். ”
ஐ.நா. செயலாளராய் பதவியேற்று ஆப்பிரிக்க யூனியனின் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் அன்டோனியோ குட்டெர்ஸ், எத்தியோப்பியாவில் உரையாற்றும்போது “ வன்முறை வெடிக்கும் நாடுகளிலிருந்து குழந்தைகளுடன் தஞ்சமடையும் அகதிகளைப் பெருந்தன்மையுடனும், மனிதாபிமானத்துடனும் ஆப்பிரிக்க நாடுகள் வரவேற்றுள்ளன. முன்னேறிய மேற்கத்திய நாடுகள் தமது எல்லைகளை மூடியும், எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பியும் வரும் வேளையில், தமது எல்லைகளைத் திறந்து வரவேற்கும் ஆப்பிரிக்க நாடுகளை மனதார பாராட்டுகின்றேன்” என்றார்.
மெக்ஸிகன் எல்லையில் ஒரு சுவர் கட்ட ஆணை பிறப்பித்த டிரம்ப் குறித்து நேரிடையாய் குறிப்பிடாமல், டிரம்பின் செய்கையை இலைமறைக் காயாய் கிண்டல் செய்து ஐ.நா செயலாளர் பேசியது, உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியது. அவர்கள் கரவொலி எழுப்பி ஐ.நா. செயலாளரின் உரையைப் பாராட்டினர்.