அம்பாறை: இஸ்லாமை எனது சகோதரன் தவறான நபர்களிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் இறந்தது எனக்கு மகிழச்சியே! என தெரிவித்துள்ளார் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கருதப்படும் ஸஹ்ரான் ஹஷீமின் சகோதரி 26 வயது மதானியா.

இலங்கையின் கிழக்கு அம்பாறை மாவட்டத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இல்லத்தில், ராணுவத்தினருக்கும், பதுங்கியிருந்தோருக்கும் இடையே நடந்த சண்டையில், 6 குழந்தைகள் உள்பட, 15 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் ஸஹ்ரான் ஹஷீமும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காட்டுவதற்காக மதானியா மற்றும் அவரின் கணவரை அணுகியுள்ளனர் ராணுவ அதிகாரிகள்.

அப்போதுதான் இவ்வாறு தெரிவித்துள்ளார் அப்பெண். மேலும், “தனது சகோதரன், மோசமான மத அடிப்படைவாதத்தின் பக்கம் திரும்பி, நாட்டிற்கு எதிராகவும், தேசியக் கொடிக்கு எதிராகவும், தேர்தல்களுக்கு எதிராகவும் மற்றும் பிற மதத்தினருக்கு எதிராகவும் பேச தொடங்கியபோதே, நாங்கள் அவனிடமிருந்து விலகிவிட்டோம்” என்றுள்ளார் மதானியா.

– மதுரை மாயாண்டி