சென்னை

மிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததற்காக திமுக தலைவர் உள்ளிட்ட 21 எம் எல் ஏக்கள் மீதான உரிமை மீறல் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21 நடைபெறும் என உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு தடை செய்தும் காவல்துறை உதவியுடன் விற்பனை நடந்து வருவதாக திமுக குற்றம் சாட்டியது.  அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனர்.  இதையொட்டி சட்டப்பேரவை உரிமைக் குழு 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்து நோட்டிஸ் அனுப்பியது.

இந்த நோட்டிசை ரத்து செய்யக் கோரி 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி  இந்த நோட்டிஸ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டார்.   இந்த தடையை நீக்கக் கோரி தமிழக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி சாஹி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்டியின் அமர்வில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மூலம் முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அந்த முறையீட்டில் தற்போது பேரவை ஆயுட்காலம் முடிவடையும் நேரம் உள்ளதால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த உரிமை மீறல் வழக்கை விரைவில் விசாரணை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக சார்பு வழக்கறிஞர்கள்,  அதிமுகவின் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டிஸ் அனுப்பியதால் இந்த வழக்கை அரசு கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.    ஆயினும் விசாரணைக்குத் தயாராக உள்ளதாக திமுக சார்பில் அவர்கள் அறிவித்ததால் இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12 தொடங்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.