மதுரை:

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை, சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு. தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது.

இந்த நிலையில்,  குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை  நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன்  அமர்வு விசாரித்து. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், குரூப்-4 முறைகேடு  தொடர்பாக  சிபிசிஐடி காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

முறையான பாதையிலேயே விசாரிக்கப்பட்டு, குற்றங்களில் ஈடுபட்டவர்கள்  கைது செய்யப்பட்டு வருவதாகவும், எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்ற தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  இந்த முறைகேட்டில் உயர்மட்ட அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடையே உள்ளதாகவும், இதனால்,  குரூப் 4 தேர்வு முறைகேட்டின் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக, உள்துறை செயலாளர், சிபிஐ இணை இயக்குனர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பாக  டிஎன்பிஎஸ்சி மற்றும் சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.