சென்னை: ​சென்னை தேனாம்​பேட்​டை​யில் காங்கிரஸ் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மாக பல கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடம், மவுண்ட் ரோடு பகுதியில், அதாவது சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காம​ராஜர் அரங்​க வளாகத்திற்குள்  அமைந்துள்ளது.

இந்த நிலத்​தில் வணிக வளாகம் கட்​டு​வதற்​காக கடந்த 1996-ம் ஆண்டு  பிரபல கட்டுமான நிறுவனமான  புளூ பேர்ல் என்ற தனியார் நிறு​வனத்துடன் காங்கிரஸ் அறக்​கட்​டளை ஒப்பந்தம் போட்டது. ஆனால், அந்த பணிகள் தொடங்கப்படவில்லை.  இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு எழுந்தது. இதனால்,  அந்த நிறு​வனம் வசம் ஒப்​படைக்​கப்​பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்​பாக ஆட்​சேபமில்லா சான்று  வழங்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. இதனால், அந்த இடம் தனியார் வசமே இருந்து வந்தது.

இதுதொடர்பாக, தனியார் கட்டுமான நிறுவனம் புளூ பேர்ல்  தரப்பில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில்,   இந்த இடத்தை கடந்த மே மாதம் 5ந்தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிரடியாக மீட்டனர். அத்துடன் தனியார் நிறுவனத்தினர் செல்லும் பாதையை அடைத்து, இரவோடு இரவாக சுவர் எழுப்பப்பட்டது.  இதனால் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

மேலும், காங்கிரஸ் அறக்​கட்​டளை​யின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து தனி​யார் நிறு​வனம் (புளூ பேர்ல்) தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி அப்​துல் குத்​தூஸ் முன்​பாக விசாரணைக்கு வந்​தது.

அப்​போது தனி​யார் நிறு​வனம் தரப்​பில், “இந்த வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது அந்த நிலத்தை காங்​கிரஸ் அறக்​கட்​டளை நிர்​வாகி​கள் தங்​களது கட்​டுப்​பாட்​டில் சுவாதீனம் எடுத்​துக்​கொண்​ட​தால், இந்த வழக்கு செல்​லாத​தாகி​விட்​டது. ஆகவே வழக்கை திரும்​பப் பெற அனு​ம​தி​யளிக்க வேண்​டும்” என்று கேட்​கப்​பட்​டது.

அதையேற்ற நீதிப​தி, காங்​கிரஸ்​ அறக்​கட்​டளைக்​கு எதி​ரான இந்த வழக்​கை தள்​ளு​படி செய்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.