சென்னை: தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வழியில், விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், மராட்டிய மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிக்கியுள்ள 400 தமிழ் தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக வழக்கறிஞர் சூர்யப்பிரகாசம் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,
“கடந்த 2 மாதங்களாக இந்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை காண்போரால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. இது ஒரு மாபெரும் மனிதப் பேரிடர்” என்று கூறிய நீதிமன்றம்,
தங்களின் வீடு திரும்பும் வழியில் விபத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டியலை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசிடம் புள்ளி விபரங்கள் இருக்கிறதா? என்று கேட்டுள்ள நீதிமன்றம், ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கிக்கொண்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் விபரங்கள் குறித்தும் கேட்டுள்ளது.
மேலும், பேரிடரில் சிக்கிக்கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு மத்திய & மாநில அரசுகள் சார்பாக செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்த விபரங்களையும் கேட்டுள்ளது நீதிமன்றம்.