டில்லி,
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நீண்டகால ஆதாயத்திற்காக தற்காலிக வலியை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று துணைஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறி உள்ளார்.
மேலும், பயங்கரவாதத்துக்கு சாதி மதம் கிடையாது என்றும் கூறி உள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஒரே கட்சியை சேர்ந்த தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும், முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெட்லிக்கு ஆதரவாக துணைஜனாதிபதி வெங்கையாநாடு, நாட்டின் பொருளாதார நிலை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் வளர்ச்சி என்பது நாட்டின் நீண்டகால ஆதாயத்தை எதிர்நோக்கி உள்ளது. இதன் காரணமாக நாம் தற்காலிக வலியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகப் பொருளாதாரம் குறைந்துவிட்டது, சீனாவும் அதன் பொருளாதாரமும் ஒரு மந்தநிலையில்தான் உள்ளது. ஆனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் உள்ளது.
தற்காலிகமான விஷயங்களில் சில சிக்கல்கள் இருக்கும். ஆனால் நீண்ட கால ஆதாயத்திற்காக தற்காலிக வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்.
சிலர் நாட்டுக்காக என்ன செய்தோம் என்றே சிந்திக்காமல், பொருளாதார நிலை குறித்து தங்கள் கருத்துக்களை கூறி அதுகுறித்து விவாதிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தமட்டில் ஒரு பரந்த உடன்பாடு இருக்க வேண்டும். இந்தியா ஒரு சமாதான நாடு என்று அமெரிக்கா கூறி உள்ளது.
மேலும், பயங்கரவாதிகளுக்கு உதவும், நிதியளிக்கும் மற்றும் பயிற்சியளிக்கும் நாடுகளுக்கு எதிரான ஒரு உறுதியான நிலைப்பாட்டை ஐ.நா. எடுக்கும் என நம்புவதாக குறிப்பிட்ட நாயுடு, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் சமாதானம் சாத்தியமாகும் என்று கூறி உள்ளார்.
பயங்கரவாதத்திற்கு சாதி மதம் கிடையாது. ஆகவே, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.