அரியானா
அரியானாவை சேர்ந்த ஒரு மறைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசுப்பணி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என உறுதிமொழிக் கடிதம் தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது
அரியானாவை சேர்ந்த சீக் ரெஜிமெண்ட் ராணுவ வீரர் மன்தீப் சிங்க்.. இவர் கடந்த 2016ஆம் வருடம் காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இவர் உடல் தீவிரவாதிகளால் சிதைக்கப்பட்டது.
இவர் மனைவி பிரேமா, முதுகலைப் பட்டதாரி, இரு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். தனது கணவரின் மறைவுக்கு ஈடாக அரசுப்பணியை கோரியுள்ளார். ஆனால் அரியானா அரசு, பிரேமாவிடம் அவர் தனது கணவரின் சகோதரரை மறுமணம் புரியமாட்டேன் என ஒப்புதல் கடிதம் ஒன்றை கேட்டுள்ளது. பிரேமா அதைக் கொடுக்காததால் இவருக்கு பணி அளிக்கவில்லை.
பிரேமா அரியானா காவல் துறையில் பணிபுரிந்தவர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அரியானா வருகையின் போது திடீரென எந்தக் காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பிரேமா இதுபற்றி கூறுகையில், தனக்கு, பணம், வசதி, வேலைவாய்ப்பை விட தன் கணவருக்கு மரியாதை கிடைக்கவேண்டும் என்பதையே விரும்புவதாகக் கூறினார்
மேலும் தான் ராஜ்நாத் சிங்கிடம் ஏதும் புகார் அளிக்கக்கூடும் என்னும் சந்தேகத்தினால் தன் பணியை பறித்ததாக பிரேமா கூறினார்
தனக்கு பல மிரட்டல் கடிதங்கள் வருவதால் தனக்கு ஏதும் நேர்ந்தால் பொருப்பேற்க யாரும் தயாராக இல்லை என்றும், பல தீவிரவாதிகளுடன் நேருக்கு நேர் போரிட்ட தனது கணவரின் தியாகத்தை எல்லாரும் மறந்தது தனக்கு மனத்துயரம் அளிக்கிறது என பிரேமா அழுகையுடன் தெரிவித்தார்
அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பிட்டா கூறுகையில் அரியானாவை ஆளும் பிஜேபி அரசு, மாபெரும் தியாகியான மன்தீப் சிங்க் மனைவிக்கு பணி மறுத்து இருக்கிறது எனவும் இது அந்த மாவீரனை அவமதிக்கும் செயல் எனவும் தெரிவித்தார்