சண்டிகர்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 12ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியது. அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய, அவசர சேவைகள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலானது.

மேலும் பகல் நேரங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. உள்ளரங்க நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேரும், திறந்த வெளி அரங்குகளில் 200 பேரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.