புதுடெல்லி:
ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்? என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கேள்விக்கு ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார்.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 1,264 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்த நிதியை, ‘ஜிக்கா’ எனும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவனம், கடனாக அளிக்க இருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 வருடம் ஆன போதிலும் இன்னும் பணிகள் தொடங்காதது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்டதில் இந்தியா – ஜப்பான் இடையே, இதற்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் தொடர்வதால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறியது.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, ‘இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை’ என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிலம் கொடுத்து விட்டதாகவும் விரைவில் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்? எய்ம்சுக்கு இதுவரை ரூ.12 கோடிதான் ஒதுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படும் தாமதத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடர முடியவில்லை. இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைக்கும் பணிகள் தொடங்கும். எய்ம்ஸ் அமைக்க ரூ.1,264 கோடி ஒதுக்கபட்டுள்ளது. இதுவரை ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.