சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்)  பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில்  தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர் ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 1248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,   இந்த திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியின் 35வது வார்டு  மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு  குடியிருப்புவாசிகளின் உடல்நலம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2024ம் ஆண்டே  தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி    சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்து இருப்பதாக அறிவித்து. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகத்தில்,   கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள்  தீப்பிடித்து எரியும் குப்பைகளால் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio -Mining) திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்த போவதாக அறிவித்தது.

அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்க முதல்வர் ஸ்டாலினும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்படும் சுமார் 250 ஏக்கர் நிலம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படும் என்பதாலும், இனி வரும் காலங்களில் அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், நோய்பரவும் வாய்ப்புகளும் குறைவு  என கூறியிருந்தார்.  ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,  எரிஉலை திட்டம் அமல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

ஆனால், தற்போது,  அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில், சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த திட்டத்துக்கு சென்னை மாநகராட்சியின் 35வது கட்ட கவுன்சிலரான மதிமுகவைச்சேர்ந்த ஜீவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எரிஉலை திட்டத்தை  கைவிட வேண்டும் என மாமன்றத்தில் வடசென்னை மக்களின்  விருப்பத்தை 35வது வார்டு  மதிமுக கவுன்சிலர் ஜீவன்  பதிவு செய்துள்ளார்.

குப்பை எரி உலை அமைக்கப்பட்டால், அங்கு குப்பைகளுடன் சேர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் உள்பட மருந்து பொருட்கள் என அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் நிலை ஏற்படும்.  அதனால்,  எரிக்கப்படும் தீயில் இரந்து வெளியாகும் புகையானது கடுமையான நோய்களை உருவாக்கும். அதாவது, புயைல் இருந்து,  டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இது மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகளை உருவாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நாட்டில் வளர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சியில், குப்பைகளை எரிக்காமல், உரமாக மாற்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு குப்பைகளை எரிக்க எரிவாய்பு உலை நிறுவ முன்வந்துள்ளது, அதுவும் வடசென்னையின்  அதிக மக்கள் வசிக்கும் மத்திய  பகுதியில் அமைக்க முன்வந்துள்ளது மக்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வடசென்னை பகுதிகளில்  அமைந்துள்ள பல்வேறு ஆலைகளால், கடுமையான  மாசால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு, குப்பை எரிவாயு உலை அமைக்கப்பட்டால், அதனால் ஏற்படும் மாசுவும் கலந்து கடுமையான பாதிப்பு உருவாக்கும் என்பதை மறுக்க முடியாது. எரிஉலையில் இருந்து வெளியாகும் புகை காற்றில், கலந்து,  மக்களுக்கு சுவாச பிரச்சினைகளை எற்படுத்தும், மேலும், இந்த புகை காற்றில்    சுற்றுச்சூழலில் அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய ரசாயனங்களும் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. (POPs – Persistent Organic Pollutants),  இது மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் இருந்து, புற்றுநோய் போன்ற கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

 இத்தகைய நச்சுப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல் நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் இது கடுமையாக பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர்.

மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாகும், கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழியக் குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை (Zero Waste Chennai) கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மாநகராட்சி கவுன்சிலர்  ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, எரிவுலையற்ற சென்னைக்கான கூட்டமைப்பு  2024ம் ஆண்டு டிசம்பரில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம்  மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள்,    நகராட்சி திடக்கழிவுகளைக் கையாள, சென்னை மாநகராட்சி ஒவ்வொரு நாளும் 2,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை எரித்து மின்சாரம் உருவாக்க குப்பை எரிவுலையை வடசென்னையில் நிறுவ முடிவு செய்துள்ளது.

இந்த குப்பை எரிவுலைகள் மிகவும் அபாயகரமான சாம்பல் கழிவுகளையும், நச்சு வாயுக்களையும் உருவாக்குபவை ஆகும். இதுபோன்ற எரிவுலை கள் இந்தியாவில் எங்கெல்லாம் நிறுவப்பட்டதோ, அங்கெல்லாம் தோல்வி அடைந்துள்ளன. குறிப்பாக டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபடுதலுக்கும், பரவும் நோய்களுக்கும் காரணமாக எரிவுலைகள் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழின் புலனாய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. ஏற்கெனவே வடசென்னையில் பெட்ரோலிய பொருட்கள் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலைகள், அனல் மின் நிலையம் போன்ற 36 சிவப்பு பட்டியல் தொழிற்சாலைகள் உள்ளன.  அத்துடன் நகரின் மிகப்பெரிய குப்பைக் கிடங்கும் இங்குதான் உள்ளது.

இவ்வாறு பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ள இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், குப்பைகளை எரிக்க அமைக்கப்படும் எரிவுலையானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த எரிஉலையானது  ஒரு நாளைக்கு 3,570 டன் கரியமில வாயுவை உமிழக்கூடியது. அதாவது,  0.50 லட்சம் கார்களில் இருந்து ஒரே நாளில் வெளியேறும் கார்பன் உமிழ்வுக்கு ஒப்பானது என ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளது. இவ்வளவு உமிழ்வு வெளியேறும்பட்சத்தில்,  அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு  கடுமையான சுவாச பிரச்சினைகள், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி, கருச்சிதைவுகள், புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தால்,  சென்னையை ‘கார்பன் நியூட்ரல்’ ஆக மாற்றும் முயற்சிக்கு பலன் அளிக்காது.  எனவே சென்னை கொடுங்கையூரில் முன்மொழியப்பட்டுள்ள குப்பை எரியூட்டி ஆலையை அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசும், மாநகராட்சியும் கைவிட வேண்டும். மாறாக திறம்பட்ட கழிவு மேலாண்மையை மாநகராட்சி செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக  ‘இன்சினரேட்டர்’ என்னும் அதிவெப்பநிலை எரித் தொழில்நுட்ப முறை பரவலாகிவருகிறது. ஆனால், இம்முறை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதாகவும், குறிப்பாக, காற்றை மாசுபடுத்துவதாகவும் நம்பப்படுகிறது.  இந்த  திட்டத்தை பல நகரங்களில் செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த எரியூட்டியை  மதுரைக்கு அருகில் உள்ள காரியப்பட்டி மருத்துவக் கழிவுகள் அழிப்புத் திட்டம் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இதையடுத்து அந்த எரி உலை அகற்றப்பட்டது. இந்த எரி உலை மூலம் , குப்பையை மட்கச் செய்யாமல் அதை அதி வெப்பநிலைக்கு எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள்.

இந்தச் சாம்பலை,  கரிம விவசாய (organic manure) உரமாகப் பயன்படுத்தலாம் என அரசும், அதிகாரிகளும் கூறி வருகின்றனர்.  ஆனால், அதில் உள்ள நச்சு வேதிப்பொருட்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.  தற்போதைய நிலையில்,  பெரும்பாலான நகரங்களில் தற்போது குப்பை ஊருக்கு வெளியே திறந்த வெளியில் எரிக்கப்படுகிறது. அப்படி எரித்தால் குப்பையின் அளவு குறைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இது தவறான புரிதல். குப்பைகளை தரம் பிரித்து, வெறும் குப்பைகளை மக்க செய்து உரமாக்கினால், அதன் பயன் அனைவருக்கும் கிடைக்கும்.  ஆனால், எரி உலை அமைக்கப்பட்டால், அதில் இருந்து வெளியாகும், புகை மட்டுமின்றி குப்பையும் உடலுக்கு கேடு விளைக்கும் என்பதை மறுக்க முடியாது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இதுபோன்ற  எரிவாயு உலை நிறுவப்பட்டால்,  குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு (பறந்து சென்று)  சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ரெட்டேரி, புழலேரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் கலப்பதோடு வீடுகளிலும் அருகாமை உணவகங்களிலும் தயாராகும் உணவுப் பொருட்களையும்கூட மாசுபடுத்தும் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்த எரி உலையில் இருந்து வெளியேறும் புகையானது,  தரையில் படியும்போது, அதில் இருந்து வெளியாகும்,  நச்சுக்களும் மழைநீரோடு கலந்து நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது. குப்பை எரிவுலைகள் எல்லா குப்பைகளையும் எரித்து அழித்துவிடுபவைபோலத் தெரிந்தாலும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பலை எச்சமாக உருவாக்குகின்றன. இந்த சாம்பல்களை உரமாக பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது.

மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களிலேயே மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக அளவிலான  டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும், மக்களின் வாழ்வோடு விளையாடாமல்,  குப்பைகளை மறுசுழற்சிக்காக வகை பிரிக்கும் நிலை யங்களை அதிகரிப்பதுடன், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதையும் கட்டாயமாக்க வேண்டும். மேலும், குப்பைகளை குறிப்பிட்ட நேரத்தில், அதன் பணியாளர்கள் பெற்றுக்கொளவ்தையும் உறுதி செய்ய வேண்டும். 

இதை விடுத்து, குப்பைகள் சேருவதை தடுக்க எரிஉலைகளை அமைத்தால், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் கேடு மற்றும் நோய்கள் சென்னை மாநகர மக்களை, குறிப்பாக வடசென்னை மக்களை நோயாளிகளாக மாற்றுவதுடன், போபால் விஷவாயு தாக்கம் அந்த பகுதி மக்களிடையே எந்த வகையான தாக்கத்தை இன்றளவும் ஏற்படுத்தி வருகிறதோ, அந்த அளவுக்கு, சென்னை மக்களும்  பாதிக்கப்படும் ஆபத்து  வரும் என்பதை யாரும் மறுக்க முடியாது….