கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அதிசயங்களை பார்த்தாகிவிட்டது, இனி பார்ப்பதற்கு ஏதுமில்லை என்று நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை மாற்றினார் ஹர்லீன் தியோல்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி நேற்று நடந்தது, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது.

மூன்று விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நேட் ஸ்கிவருடன் ஜோடி சேர்ந்த ஆமி எலன் ஜோன்ஸ் நான்காவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் 163 வது ரன்னில் ஸ்கிவர் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 166 வது ரன் எடுத்திருந்த நிலையில் எலன் ஜோன்ஸ் அடித்த சிக்ஸரை பவுண்டரி லைனில் லாவகமாக பிடித்த ஹர்லீன் தியோல், தனது இந்த கேட்ச் மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

டைமிங், துல்லியம், வேகம், சுறுசுறுப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு கேட்சாக இது அமைந்தது என்றால் அது மிகையல்ல.

எல்லைக் கோட்டைத் தாண்டி சிக்சருக்கு பறந்து சென்ற பந்தை ஓடிவந்து கொத்திப் பிடித்த தியோல் தனது கால் எல்லைக்கோட்டை தொடப்போவதை உணர்ந்தவராய் பிடித்த பந்தை உடனே ஆகாயத்தில் தூக்கி எறிந்தார், எல்லைக்கோட்டுக்குள் சென்ற தியோல், பந்து மீண்டும் பவுண்டரி லைனை கடப்பதை பார்த்து எம்பி குதித்து அந்த பந்தை மீண்டும் பிடித்து கேட்சை முழுமை செய்தார்.

இது மொத்தமும் ஒரு நொடிக்குள் நிகழந்ததைக் கண்டு களத்தில் இருந்த இந்திய அணி வீராங்கனைகள் மட்டுமன்றி, இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் டேனியல்லே வியாட்-டும் வியந்துப் பாராட்டினார்.

இந்த வீடியோ-வை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ட்விட்டரில் பதிவிட்ட சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் விளையாட்டு வீரர் வி.வி.எஸ். லஷ்மண் உட்பட பலரும் பகிர்ந்தனர்.

ஹர்லீன் தியோலின் இந்த கேட்ச் “கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்ற கேட்ச்சை காண்பது அபூர்வம்” என்று வி.வி.எஸ். லஷ்மண் பதிவிட்டுள்ளார், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் சுதா ராமன், ஐ.எப்.எஸ். போன்ற அதிகாரிகளும் அவரை பாராட்டி இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 177/7 எடுத்தது அடுத்து விளையாடிய இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால், ரன் ரேட் படி இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.