மும்பை: தனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது முதல் தனக்கு டெஸ்ட் போட்டி என்பது சவாலாக மாறியுள்ளது என்றுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 2018ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியின்போது எனது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்போதே எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது கடினமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதனால் எனது உடலின் அதே பகுதியில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் எனது நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை நான் இடம்பெற்றுள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் என்மீது மிகுந்த அக்கறை செலுத்தினார். கிரிக்கெட் குறித்த அதிக நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். நெருக்கடியான சூழலில் எப்படி செயல்பட வேண்டுமென்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன்” என்றார் பாண்ட்யா.