லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ . இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .
இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.
விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் முதல் பார்வை வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, யூடியூப் தளத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஹரீஷ் பேரடி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ‘சுல்தான்’, ‘கைதி’, ‘தம்பி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், விரைவில் கோயம்புத்தூரில் நடந்துவரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.