காந்திநகர்

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திப் பிரபலமானவர் ஹர்திக் படேல்  ஆவார். 28 வயதாகும் இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அவர் குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சமீபகாலமாகக் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.  தாம் 3 ஆண்டு காலத்தைக் காங்கிரஸில் இருந்து வீணடித்துவிட்டதாகவும் விமர்சனம் செய்தார்.  கடந்த 18-ம் தேதி அன்று அவர் காங்கிரஸில் இருந்து விலகினார்.

பிறகு அவர் பாஜக தலைமையைப் புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது. அதே நேரம் அவர் ஆம் ஆத்மியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.  தாம் பாஜகவில் இணைவதை ஹர்திக் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹர்திக் படேல் தனது டிவிட்டரில் ”நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காக பாஜகவுக்கு மாறி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.