காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக  வசிக்கும் பட்டேல் இனத்தலைவரான ஹர்திக் பட்டேல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 2015ம் ஆண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினார். அவருடைய போராட்டத்துக்கு பட்டேல் சமூகத்தினர்  பெருமளவு ஆதரவு தெரிவித்தால், குஜராத் பாஜக அரசு கடும் நெருக்கடியை கொடுத்தது. இருந்தாலும் போராட்டத்தை தொடர்ந்து, குஜராத் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று  குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு வருகை தந்த  ஹர்திக் பட்டேல் காங்கிரசில் இணைந்தார். அவருடன் ஏராளமான அவரது கட்சி தொண்டர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவரை ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார். ஹர்திக் பட்டேல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தி லும் ஹர்திக் பட்டேல் கலந்துகொண்டார்.