மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்களை  சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடிகாரங்கள் வாங்கியதற்கான ரசீது காண்பிக்காததால், அதை கைப்பற்றி இருப்பதாக மும்பை சுங்க துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, அசத்தலாf ஆடி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். ஆடம்பர பிரியராக கூறப்படும் பாண்டியா, கைக்கடிகாரங்களை சேர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவரிடம் விதவித மான கடிகாரங்கள் உள்ள நிலையில், தற்போது வெளிநாட்டில் இருந்து கோடி கணக்கான ரூபாய் மதிப்புடைய 2 கடிகாரங்களை வாங்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஐபிஎல், டி20உலக கோப்பை போன்ற போட்டிகளில் ஆடுவதற்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாண்டியா, அங்கு புதிதாக 2 கடிகாரங்களை வாங்கி உள்ளார்.  5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள Patek Philippe Nautilus Platinum 5711 கடிகாரத்தை அவர் வாங்கியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பை திரும்பிய ஹார்திக் பாண்டியாவின் உடமைகளை மும்பை விமான நிலைத்தில் சோதனையிட்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து விலை உயர்ந்த  இரண்டு கைக்கடிகாரங்களை கைப்பற்றினர். இந்த கைக்கடிகாரம் வாங்கியதற்கான ஆதாரங்கள், பில் இருந்தால் காண்பிக்கும்படி, அவரிடம் கேட்ட நிலையில், அவர் சரியான பதில் கூறாததால், அவரிடம் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள 2 கடிகாரங்களையும்  சுங்கத் துறையின் பறிமுதல் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஹார்திக் பாண்டியாவுக்கு சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது.