மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு, சென்னை அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் உயர் நிர்வாகிகளில் ஒருவர்.
மும்பையில், ஒரு கேளிக்கை விடுதியில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக ரெய்னா கைதுசெய்யப்பட்டு, பெயிலில் விடுவிக்கப்பட்டதையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது சுரேஷ் ரெய்னா தரப்பிற்கு ஆறுதலை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
சமீபத்தில் அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே, ஒழுங்கின்மை காரணமாக, கேப்டன் தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் ஆகியோருடன் கோபித்துக் கொண்டு, நாடு திரும்பி, தேவையில்லாமல் கோடிக்கான பணத்தை இழந்தார் ரெய்னா. அப்போதே, அவரின் முதிர்ச்சியின்மை விமர்சிக்கப்பட்டது.
தற்போது, சென்னை அணிக்கான கதவுகள் அவருக்கு நிரந்தரமாக அடைக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் அடுத்த சீசனிலும் சென்னை அணியில் தொடர்வார் என்றும், அவரை விலக்கி வைப்பது தொடர்பான எந்த எண்ணமும் இல்லை என்றும் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.