சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,54,460 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 512 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது முதல், தொற்று பரவலும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 26ந்தேதி அதிகபட்சமாக கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, தொற்று பரவல் அதிகரித்தாலும், உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. சென்னை உள்பட பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் கண்டுபிடிக்கும் நோக்கில் கிளினிக்குகள் நடத்தப்பட்டு, தொற்று பரவலை தடுத்து வந்தனர். மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி, நீரிழிவு உள்பட மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா நோய் தாக்குவதில் இருந்து தவிர்க்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது. மேலும் கபசுர குடிநீர், ஆர்சானிக் ஆல்ப் போன்ற சித்தா, ஓமியோபதி மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இதன் காரணமாக தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா உயிரிழப்பும் நாளுக்கு நாள் குறைந்து வந்தது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 14 ஆக குறைந்துள்ளது. இதில், 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11,454 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ள மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.