டெல்லி: அனுமன் ஆசிர்வாதத்தால் தான் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றாரே தவிர வேறு எதுவும் இல்லை என்று ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா விமர்சித்து இருக்கிறார்.
டெல்லியில் உள்ள 70 சட்ட சபை தொகுதிகளுக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி அபார முன்னிலையில் இருந்து வந்தது. முடிவில், அதீத பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலை மீண்டும் பிடித்தது ஆம் ஆத்மி.
இந்த வெற்றி குறித்து திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், அனுமன் ஆசிர்வாதத்தால் வெற்றி கிடைத்தது என்று பேசினார். அவரது இந்த கூற்றுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.
ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா கூறி இருப்பதாவது: அனுமன் சாலிசா காரணமாக கெஜ்ரிவால் வென்றுள்ளார். அவரை அனுமன் ஆசிர்வதித்து இருக்கிறார்.
முதன்முறையாக அனுமனை பற்றியும், அவரின் ஆசிர்வாதம் பற்றியும் கெஜ்ரிவால் பேசியிருக்கிறார். ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட போதிலும் பாஜக ஏன் ஆசீர்வதிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது, ஏனெனில் லட்சக் கணக்கானோர் ராமன் பெயரை மீண்டும் மீண்டும் முழக்கமிட்டனர் என்றார்.