டில்லி:

குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரண தண்டனைக்கு மற்றவிதமான தண்டனைகளை விட தூக்குத் தண்டனை சரியானது என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மரண  தண்டனை முறையை மாற்றக்கோரி டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் தொடர்ந்த வழக்கில்  பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்து உள்ளது.

மேலும், துப்பாக்கியால் சுடுவது, விஷஊசி முறையைவிட தூக்கிலிடுவது பொருத்தமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான முறையில்  மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நம் நாட்டில்,  மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு வருகிறார்கள்.

இந்த முறையை மாற்றக்கோரி டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷி மல்கோத்ரா என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  “மரண தண்டனையின்போது குற்றவாளிகளின் துன்பத்தைக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் தூக்கிலிடப்படுகையில், அவனுடைய கண்ணியம் அழிக்கப்படுகிறது. ஒருவர் தனது வாழ்நாள் முடியும் நிலையில் வலியால் இறக்கக் கூடாது. அமைதியாக இறக்க வேண்டும். எனவே தூக்கு தண்டனைக்குப் பதில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மரண தண்டனை முறையை ஏன் மாற்றியமைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரண தண்டனைக்கு மற்றவிதமான தண்டனைகளை விட தூக்குத் தண்டனை சரியானது என்றும்,  துப்பாக்கி யால் சுடுவது, விஷஊசி முறையைவிட தூக்கிலிடுவது பொருத்தமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.