டெல்லி:
வரும் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதிக்கு பிறகு ‘ஹால்மார்க்’ முத்திரை இடம்பெறாத நகைகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்து உள்ளது.
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இதற்கான அறிவிப்பைவெளியிட்டு உள்ளார். நுகர்வோர் விவகாரங்கள் துறை முறையான அறிவிப்பை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி வெளியிடும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தங்கநகைகளின் சுத்த தன்மையை சான்றளிப்பதுதான் ‘ஹால்மார்க்’ முத்திரை. இது தேசிய தர மதிப்பு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்த ஹால் மார்க் முத்திரை 2021ம் ஆண்டு ஜனவரி 15 முதல் அமலுக்கு வருகிறது. அதற்குள் நகைக்கடை அதிபர்கள், தங்களிடம் இருப்பில் உள்ள நகைகளை விற்று தீர்த்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த ஓராண்டு கால அவகாசம் என்று கூறி உள்ளார்.
ஹால்மார்க் முத்திரை என்பது 4 முத்திரைகளை கொண்டது. அவை பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் சுத்த தன்மையை குறிக்கும் முத்திரை, ஹால்மார்க் மையத்தின் முத்திரை, நகைக்கடையின் முத்திரை ஆகும்.