சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயல் மற்றும் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக வடமாவட்டங்கள் பேரிடரை எதிர்கொண்டுள்ளன. அங்கு இன்னும் தண்ணீர் வடியாத நிலையில், பள்ளிகளும் திறக்கப்படவில்லை. இதற்கிடையில், முன்னறிவிப்பின்றி அணை திறக்கப்பட்டதால், பல கிராமங்களில் தண்ணீர் புகுந்த நிலையில், பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் உள்பட வீட்டுஉபயோக பொருட்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. இதனால், டிசம்பரில் நடைபெற உள்ள அரையாண்டு தேர்வை குறிப்பிட்ட 3 மாவட்டங்களில் தள்ளி வைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட உத்தரவில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி, பெஞ்சல் புயலின் மழை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன்கருதி நடைபெற உள்ள அரையாண்டுத் தேர்வுகளை இந்த மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகளை வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் நடத்திடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கான ஆயத்தப் பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிந்த பிறகு முறையாக பள்ளி திறக்கும்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை நடத்தவும், அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் ஏதேனும் முடிக்கப்படாமல் இருந்தால் அதனை முடிக்கவும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் மூலமாக வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
இந்த மாவட்டங்களுக்கும் அரையாண்டு விடுமுறை காலம் வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பொருந்தும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.