சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (24ந்தேதி) விடுமுறை விட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு சுழற்றி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணாக்கர்களுக்கு திருப்புதல் தேர்வு (ரிவிஷன் டெஸ்ட்ஸர) நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், பாடத்திட்டங்களை முடிக்க இயலாத நிலை உருவாகி உள்ளது. இதனால், வழக்கமாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி அரையாண்டு விடுப்பு பத்து நாட்கள் வழங்கப்படும்.
ஆனால், இந்த ஆண்டு அதிக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு விட்டதாலும், பாடத்திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் வகையில், அரையாண்டு விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஆசிரியர்கள் அமைப்பினர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அரையாண்டு விடுமுறை கோரி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான 24ந்தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஆசிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.