புதுடெல்லி: நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பாதியளவுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவைக் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் அதை முறையாகப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே, இந்த மோசமான உள்கட்டமைப்பு நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையால் கோரப்பட்ட தொகையைவிட, மத்திய பட்ஜெட்டில் 27% அளவிற்கு குறைவான தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளது மனிதவளத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு.
கல்வித்துறையின் சார்பில் கேட்கப்பட்டத் தொகை ரூ.82570 கோடிகள். ஆனால், ஒதுக்கப்பட்டதோ ரூ.59845 கோடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றை போதுமான அளவில் அமைத்து, அதன்மூலம் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதில் அரசுகளின் தரப்பில் மெத்தனம் காட்டப்படுகிறது என்று நாடாளுமன்ற நிலைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
அரசுப் பள்ளிகள் விஷயத்தில், இத்தகைய மோசமான உள்கட்டமைப்பு வசதிகளால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், அதிகளவில் வடமாநிலங்களில்தான் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.