சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக அரசின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு,  “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘பத்தாண்டுகால அ.தி.மு.க.வின் ஆட்சியில் தமிழ்நாட்டின் பெரும்பாலான துறைகளில் இருள் சூழ்ந்தது. அந்த இருட்டில் ஊழல் பாம்புகள் நெளிந்தன; லஞ்ச-லாவண்யம் படம் எடுத்து ஆடியது. நிர்வாக இருட்டைப் பயன்படுத்தி, மாநில உரிமைகள் கொள்ளை போயின. பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றது. தொழில் முதலீடுகள் வேறு திசை திரும்பி – வெளி மாநிலங் களுக்குச் சென்றன. தமிழ்நாட்டுத் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாயின. மிச்ச சொச்சமிருந்த வேலைகளும் தமிழே அறியாதவர்களுக்குத் தாரைவார்க்கப்பட்டன. இத்தனைக் கேடுகளையும் களைந்திடுவதே ஒரு பேரிடராக இருந்த நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை என்ற பேரிடரையும் எதிர்கொள்ள வேண்டிய பெரும் கமையுடன்தான் மே 7-ஆம் நாள் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற உறுதிமொழியுடன் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றேன்.

ஆன்மிக வழி அரசு என்று ஆதீனகர்த்தர்களும் அடிகளார்களும் பக்தர்களும் பாராட்டும் வண்ணம் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருப்பதுடன், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரைநூற்றாண்டு கால சமூகநீதிக் கனவும் நிறை வேற்றப்பட்டுள்ளதாகவும், தேமதூரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள், இளைஞர் நலன் சார்ந்த திட்டங்கள், விளையாட்டுத் துறை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, திருநங்கையர் நலன், மாற்றுத்திறனாளிகள் உரிமை என ஒவ்வொரு துறையிலும் கூடுதல் கவனம் செலுத்திச் செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு.

மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் உடனுக்குடன் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காள ‘முதல்வரின் முகவரி’, அறிவிக்கப்படும் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் எந்த அளவு நடைபெறுகின்றன என்பதை கவனிப்பதற்கான ‘முதல்வரின் தகவல் பலகை’ என அங்குலம் அங்குலமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நடைமுறைகளில் உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ‘திராவிட மாடல்’ அரசு செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், பெயரளவில் இல்லாமல் செயல்முறையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அரசின் செயல்பாடுகளை இந்திய அளவிலான ஏடுகள் பாராட்டுகிறது.

மேலும், இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என்பதை விட இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடிய தாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், அதற்கான உழைப்பு தொடரும் எனவும், இடர்ப்பாடுகளை நீக்கி, வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இது மக்களின் அரசு; மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற அரசு. நூறாண்டு கால ‘திராவிட மாடல்’ வளர்ச்சியை ஓராண்டு காலத்தில் மீட்டெடுத்து, இலட்சியப் பாதையில் தலைநிமிர்ந்து பயணிக்கின்ற தமிழ் அரசு!” .

இவ்வாறு கூறியுள்ளார்.