புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, கூடுதலாக 63,980 வரை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவிற்கான ஒதுக்கீடு 1,36,020. அந்த எண்ணிக்கை தற்போது 2,00,000 என்பதாக அதிகரித்துள்ளது. அதாவது, 63,980 யாத்ரிகர்கள் கூடியுள்ளனர்.
இந்தமுறை 2,00,000 ஹஜ் யாத்ரிகர்கள் எந்தவித மானியமும் இல்லாமல் தங்களின் புனிதப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். இது இந்திய வரலாற்றில் ஒரு சாதனை எண்ணிக்கை.
மொத்த எண்ணிக்கையில் 1,40,000 யாத்ரிகர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் ஏற்பாட்டின் பேரிலும், 60,000 யாத்ரிகர்கள் தனியார் ஏஜென்சிகளின் மூலமும் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள்” என்றார்.