போர்ட்டோ பிரின்ஸ்
ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸே இன்று அவர் இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
ஹைதி நாடு கரிபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றாகும். இதன் அதிபர் அதிபராக ஜோவெனல் மாய்ஸே உள்ளார். இவரது இல்லம் போர்ட்டோ பிரின்ஸ் நகரில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஹைதி நாட்டில் வறுமை, உணவு பற்றாக்குறை ஆகியவை மிகவும் கடுமையாக உள்ளன. இதனால் பல போராட்டங்கள் நிகழ்கின்றன.
நாட்டின் தலைநகரான போர்ட்டோ பிரின்ஸ் நகரில் கடும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இங்கு ஜோவெனல் அதிபர் பதவியில் உள்ளார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே இவரது நடவடிக்கைகளைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் ஜோவெனல் தனது இல்லத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. மேலும் அவர் மனைவியும் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை தகவலை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப் படுத்தி உள்ளார்.
ஜோவெனல் கொல்லப்பட்ட செய்தியில் கிளாட் ஜோசப், “இந்த கொலை சம்பவம் மனிதத் தன்மையற்ற ஒரு காட்டுமிராண்டி செயல் ஆகும். இந்த நேரத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசை வழி நடத்தவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.