ராஞ்சி: தற்போது சிறையிலிருக்கும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவர்களை தனது அணிக்கு இழுக்க முயல்கிறார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி.
அதேசமயம், இன்றைய அரசியல் சூழலில், இந்தக் குற்றச்சாட்டு ஒரு போலியானது என்று பலர் மறுத்து வருகிறார்கள்.
சுஷில்குமார் மோடி கூறியுள்ளதாவது, “சிறையில் தனது உதவியாளராக இருக்கும் இர்ஃபான் அன்சாரியினுடைய அலைபேசியின் மூலம், என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு, மந்திரி பதவி தருவதாக ஆசைக்காட்டி, அவர்களை ஆர்ஜேடி கூட்டணிக்கு இழுக்க முயல்கிறார்.
இதனையடுத்து, அந்த எண்ணுக்கு நான் தொடர்புகொண்டபோது, லாலுவே நேரடியாக அலைபேசியை எடுத்தார். அவரிடம், நான், இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபட வேண்டாம்; இதில் நீங்கள் வெற்றியடைய முடியாது என்று எச்சரித்தேன்” என்றுள்ளார் அவர்.
இந்நிலையில், சிறையில் இருந்துகொண்டு அலைபேசியை பயன்படுத்தும் முறைகேட்டில் லாலு ஈடுபட்டிருப்பதை, ஜார்க்கண்ட் மாநில அரசு கண்டுகொள்ளாதா? என்ற கேள்வியை பாரதீய ஜனதாவினர் எழுப்பியுள்ளனர்.
மேலும், முறைகேடுகளைத் தவிர்க்க, லாலு பிரசாத்தை ஹோட்வார் சிறைக்கு மாற்ற வேண்டுமென்று ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.