சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த இரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இரவு சுமார் 7 மணியளவில் உயிரிழந்தார். 70 வயதான அவருடைய மறைவுக்கு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் உள்பட அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடினமான உழைப்பின் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்தவர், ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளா தாரத்திற்கு பெரும் பங்காற்றியவர் வசந்தகுமார். விற்பனையாளராக தனது வாழ்க்கையை துவங்கிய வசந்தகுமார், தனது கடின உழைப்பின் காரணமாக உயர்ந்தவர்” என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வசந்தகுமாரின் மறைவு தமிழக காங்கிரசுக்கு பேரிழப்பு. கொரோனா காலத்தில் தனது தொகுதிக்கு வாரி வாரி வழங்கியவர் வசந்தகுமார். இவரது இழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது.
உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார், வசந்தகுமார் என்றால், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என வாழ்ந்தவர் என கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் – அகத்தீசுவரத்தில் பிறந்த வசந்த்குமார் தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி புரிந்தார். பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். வசந்த் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
எச்.வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும், முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அவர்கள், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தார்.
உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும்.
வசந்தகுமார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனார் தொற்றால் உயிரிழந்த வசந்தகுமாருக்கு அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிட்டர் மூலம் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும் என தெரிவித்த அவர், வசந்த குமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
எம்.பி வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வசந்தகுமார் எம்.பி மறைவு இதயத்தை ஒருகணம் அசைத்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்பு தமிழர் காலமாகிவிட்டார் என்று வைரமுத்து கூறியுள்ளார். வசந்தகுமார் உழைப்பு தேனீ, ஓயாக் கடல், அடித்தட்டு மக்களின் அன்பர். பூமிக்கு வந்துபோன வசந்தமாய் போய்விட்டார் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைவரிடத்திலும் அன்பாக பழககூடியவர் வசந்தகுமார் எம்.பி என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற தீரா நல்லெண்ணம் கொண்ட அவரது மரணம் பேரிழப்பு என்று கூறியுள்ளார்.