பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என தனக்குத் தெரியாமல் தனது உதவியாளர் பதிவிட்டுவிட்டார் என எச்.ராஜா சொல்வது அபத்தம் என தெரிவித்துள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து பதிவை நீக்கிய ராஜா, “அதை தனது கவனத்துக்கு வராமல் தனது உதவியாளர் (அந்தப் பக்கத்தில் அட்மின்) பதிவிட்டுவிட்டார். ஆகவே நீக்கிவிட்டேன்” என்றார்.
இந்த நிலையில், ராஜாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டித்துள்ளார். அவர், “தனக்குத் தெரியாமல் தனது உதவியாளர் பதிவிட்டுவிட்டார் என எச்.ராஜா சொல்வது அபத்தம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.