சென்னை,
சோனியா காந்தியை தரக்குறைவாக பேசிய பாரதியஜனதா தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர்.
அப்போது எச்.ராஜாவின் உருவை பொம்மை எரிக்கப்பட்டது.
சோனியா காந்தி பற்றி அவதூறாக பேசிய ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதையடுத்து எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், அவரது உருவபொம்மையை தீவைத்தும் எரித்தும் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்கு செய்தியாளர்களிடம் கூறிய இளஞ்செழியன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால், அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினர்.
மேலும், இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.
அதேபோல், திருவொற்றியூர் தேரடியில், பகுதி தலைவர்கள் அரவிந்த் ஆறுமுகம், தேசிய மணி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் எச்.ராஜா உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து எரித்தனர்.
இதில் மணலி பகுதி தலைவர் ரமேஷ், சன்னசேக்காடு பகுதி தலைவர் தீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஹெச்.ராஜா, “மோடியை மட்டுமே ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது சோனியா காந்தியை இதுபோன்று விமர்சிக்கவில்லை. வெள்ளைத் தோல் கொண்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியா காந்தியைப் பார்த்து ஊடகங்கள் பயந்தன” என்றும், செய்தியாளர்களை தேசத் துரோகிகள் என்றும் கூறினார்.
ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.