
சென்னை
பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா ”உதயநிதி என்பது தமிழ்ப் பெயரா?” என தனது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன் தனக்கு ரஷ்ய புரட்சியாளர் ஸ்டாலின் நினைவாக பெயர் வைக்கப்பட்டதாகவும் ஆனால் தனது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதை ஒட்டி பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் , “ஆமாம். உதய நிதி என்பது தமிழ்ப் பெயரா? சும்மா ஒரு டவுட்” என பதிந்துள்ளார். ஏற்கனவே பல சர்ச்சைகளை கிளப்பி உள்ள எச். ராஜா தனது அடுத்த சர்ச்சையை தொடங்கி உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
உதயநிதிக்கும் ராஜாவுக்கும் ஏற்கனவே சர்ச்சைகள் எழுந்தது உண்டு. மெர்சல் படத்தை ராஜா எதிர்த்த போது, உதயநிதி, “எச். ராஜா ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு விளம்பரம் செய்து ஓட வைத்தார். அது போல் நான் நடிக்கும் இப்படை வெல்லும் படத்துக்கும் அவரை பேச வைக்க எண்ணி உள்ளேன்” எனக் கூறி இருந்தார். அதற்கு பதிலாக ராஜா, “ஒன்றும் பிரயோஜனம் இல்லை. நாங்கள் உதவினாலும் உதயநிதியின் படம் ஓடாது” என பதில் அளித்திருந்தார்.
தற்போது உதயநிதியின் பெயரை விமர்சித்து அடுத்த பரபரப்பை எச். ராஜா உண்டாக்கியுள்ளார்.
[youtube-feed feed=1]