டெல்லி: கியான்வாபி மசூதி வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை மே 26ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி 2021 ஆகஸ்ட் 18-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. வாரணாசியின் சிவில் நீதிமன்றம் விசாரித்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் களஆய்விற்கு உத்தரவிடப்பட்டது.
இதில், மசூதி வளாகத்திலுள்ள ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாக அறிக்கை தாக்கலானது. இதனிடையே, மசூதி நிர்வாகம் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிங்கார கவுரி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. மசூதியின் தரப்பில், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ன்படி, கியான்வாபி மீதான வழக்கை தள்ளுபடி செய்ய முதலில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், சிவலிங்கம் கிடைத்ததாக கூறப்படும் ஒசுகானாவின் சீல் அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மசூதியின் இக்கோரிக்கைகள் மீது நீதிமன்றம் முதலில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவைப் பொறுத்து இதர பிரச்சினைகளில் வழக்கு தொடரும் எனவும் கருதப்படுகிறது.
இதனிடையே, இந்துக்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட நீதிபதியின் முன் வைக்கப்பட்டன. களஆய்வில் கிடைத்த ஆதாரங்களையும் வழக்கின் அங்கமாக சேர்க்க கோரப்பட்டது. களஆய்வின் அறிக்கையுடன் அதன் புகைப்படம், வீடியோ ஆதாரங்களின் நகல் அளிக்கும்படியும் கேட்கப்பட்டிருந்தது. சிங்கார கவுரியுடன், ஒசுகானாவில் கிடைத்த சிவலிங்கத்தையும் அன்றாடம் தரிசனம் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட நீதிமன்ற நீதிபதியிடம் வழக்கறிஞர் ஹரி சங்கர் பாண்டேவால், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கியான்வாபி வழக்கில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், ஐதராபாத் எம்.பி. எஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார்.
இதே நீதிமன்றத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், ஒசுகானாவில் கிடைத்த சிவலிங்கத்திற்கு அன்றாடம் பூஜை செய்து ராஜபோகம் வழங்கவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி டாக்டர் அஜய் கிருஷ்ணா விஸ்வேஷ் அடுத்த விசாரணையை மே 26ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளார்.