சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டது. இதேபோல், குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவவதால் அவற்றுக்கு தமிழ் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது,  இந்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இத்தகைய போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

ஆனால், தடையை மீறிய குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்பனையாகி வந்தது. இதில், அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் மாமூல் வாங்கியதும் தெரிய வந்தது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இருந்தாலும் போதை பொருட்களின் நடமாட்டத்தால், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசின் காவல்துறை  கஞ்சா 2.0 என்ற பெயரில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து வருவதோடு, அவற்றின் விற்பனையையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் அருகே இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குட்கா, பான் மசாலா போன்ற  போதைப்பொருட்களுக்காக தடை கடந்த 23ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, இந்த தடையை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.