சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்துச்சென்றது தொடர்பாக உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்றுவதை, சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நோட்டீசில் தவறு உள்ளதாக கூறி அதனை ரத்து செய்ததுடன், இதில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது. இதை யடுத்து, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில்,உரிமை குழுவின் நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டசபை உரிமைக் குழு தலைவர் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியானது. அதையடுத்து, சட்டபேரவைக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில், உரிமைக்குழுவின் நோட்டீஸுக்கு விதிக்கப்பட்ட சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.