சென்னை:
பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் பேரவை உரிமை குழு 21 தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை எதிர்த்த வழக்கு கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்களாக இறுதி விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதில் தி.மு.க உறுப்பினர்கள் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை என்று தி.மு.க தரப்பில் ஆஜரான மூன்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை தன்னுடைய வாதங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த வழக்கில் தன்னுடைய வாதங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ – வான கு.க. செல்வம் தரப்பில் இருந்து முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிக்கும் போது எங்கே சென்றிர்கள். ஏற்கனவே நடைபெற்ற விசாரணைக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் மனுதாரர் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைத்ததால் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதாவது தன்னுடைய கோரிக்கையை மீண்டும் விசாரிக்க வேண்டும், அல்லது தி.மு.க தரப்பு கோரிக்கையை தன்னுடைய வாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும், அவ்வாறு தாக்கல் செய்யும் பட்சத்தில் கு.க. செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து கு.க. செல்வம் தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.