குருகிராம்

ஊரடங்கால் தந்தையை 1200 கிமீ சைக்கிலில் அழைத்து வந்த மாணவி ஜோதிகுமாரி தமக்கு பயிற்சியாளராக வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில்  அமைந்துள்ள குருகிராம் பகுதியில் உள்ள மோகன் பாஸ்வான் என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தார்.  சில தினங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கி இவர் காயம் அடைந்தார்.  ஆட்டோ வாடகை கொடுக்காததால் இவரது ஆட்டோவை உரிமையாளர் பறிமுதல் செய்து விட்டார்.  கொரோனா பரவலைத் தடுக்க நாடெங்கும் அமலாக்கப்பட்ட ஊரடங்கால் இவர் குடும்பத்தினரும் மிகவும் துயருற்று வந்தனர்.

எனவே மோகன் பாஸ்வான் மற்றும் அவரது மகளான 8 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஜோதிகுமாரியும் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர்.   ஜோதிகுமாரி தனது தந்தையைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு குருகிராமில் இருந்து கிளம்பினார்.  கடந்த 10 ஆம் தேதி கிளம்பிய அவர் 1200 கிமீ தூரத்தை 7 நாட்களில் கடந்து 16 ஆம் தேதி பீகாருக்கு வந்தார்.

இந்த சாகசப்பயணத்தை நாடெங்கும் பலர் பாராட்டி உள்ளனர்.  இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு ஜோதிகுமாரிக்கு முறையாகப் பயிற்சி அளித்து தேசிய  போட்டிகளில் பங்கு பெறச் செய்ய முன் வந்துள்ளது.  அது மட்டுமின்றி ஜோதிகுமாரியை டில்லிக்கு அழைத்துச் சென்று அவருக்கு தேசிய அகாடமியில் பயிற்சி அளித்து அவரை ஒரு பயிற்சியாளராக முன் வந்தது.

ஜோதி குமாரி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.  அவர்,”நீண்ட தூரப் பயணத்தால் நான் இப்போது உடல் பலவீனமாக உணர்கிறேன்.  குடும்பப் பிரச்சினை காரணமாக நான் இடையில் பள்ளிக் கல்வியைத் தொடர இயலாமல் இருந்தேன்.  எனவே நான் எனது கல்வியைத் தொடர்ந்து மெட்ரிக் படிப்பை முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.  நான் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்