ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநில்ததில் இன்றும் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரில், உரி ராணுவ முகாவ் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 19 பேர் பலியானார்கள். இதையடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது. இது குறித்து சில கட்சியினர் ஐயம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஹாண்ட்வாரா பகுதியில் உள்ள லாங்கேட் ராணுவ முகாம் அருகே இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இருபது நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் அதே பகுதியில் காலை 6.30 மணியளவில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவ முகாமை குறி வைத்து பயங்கரவாதிகள் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதால் மீண்டும் பதட்டமான சூழல் நிலவுகிறது.