
அகமதாபாத்:
குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகப்படியான கருணை வழங்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்த சிறப்பு விசாரணைக்குழுவின் வழக்கறிஞர், தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டியில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. மேலும், அந்த கட்டிடத்துக்கு தீ வைத்தது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 66 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு செசன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அதுல் வைத்யா உள்பட 24 பேரை குற்றவாளிகள் எனவும் அவர்களுக்கான தண்டனை விவரம் பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று குற்றவாளிகள் 24 பேருக்குமான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

\குல்பர்க் சொசைட்டி வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழுவின் வழக்கறிஞர் தீர்ப்பு தமக்கு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு அதிகப்படியான கருணை காட்டப்பட்டு இருப்பதாகவும், ஆயுள் தண்டனையில் வாழ்நாள் முழுவதும் என்ற பிரிவு சேர்க்கப்படவில்லை என்றும் கூறினார். ஆகவே தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel