பாட்னா: பிரதமர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றால், அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், எங்களின் ஒரே முதன்மையான நோக்கம், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் என்றும் கூறியுள்ளார்.

“அனைத்து எதிர்க்கட்சிகளும் மனம் ஒத்து எங்கள் கட்சியை ஆட்சிக்கு தலைமையேற்க அழைத்தால், எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், பாரதீய ஜனதாவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்பதுதான் முதன்மையான இலக்கு” என்று கூறியுள்ளர் அவர்.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியில், ஒவ்வொரு தலைவருக்குமே பிரதமர் பதவி மீது ஆசையுள்ளது மற்றும் அவர்களுக்குள் ஒரு பெரிய போட்டியே நிலவுகிறது என்று பாரதீய ஜனதா பிரச்சாரம் செய்துவரும் நிலையில், இப்படியானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்.

“பிரதமர் பதவி எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அதை வேறுயாரும் அடைய விடமாட்டோம் என கூறப்படுவது பொய்” என்று மேலும் தெளிவுபடுத்தினார் குலாம் நபி ஆசாத்.